தவெக என்ட்ரி குறித்து ஓபனாக பேசிய விஷால்!

ரும் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு விஜய் அழைக்காவிட்டாலும், தான் செல்வேன் என கூறிய விஷால், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கும் பதில் அளித்தார்.

 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படி அதிரடியாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்த கேள்விக்கு தான் இப்படி பதில் அளித்தார்.

 

மேலும், 27ஆம் தேதி நடைபெறும் நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டிற்கு தன்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் பங்கேற்பேன் எனவும் விஷால் தெரிவித்தார். “விஜய் மாநாட்டில் கூப்பிட்டால் கலந்து கொள்வேன். வாக்காளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வேன். எனினும், விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமலே செல்வேன். அவருடைய கருத்து என்ன, அவர் என்ன மக்களுக்கு கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே செல்வேன்.” என்றும் கூறினார்.தவெகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் கூற முடியாது.

 

முதலில் விஜய் மாநாடு நடத்தட்டும். முதல் அடி வைக்கட்டும்.அவர் என்ன செய்யப் போகிறார், அவருடைய செயல்பாடுகள் என்ன.. என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். சமூகப்பணி செய்பவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். நானும் ஒரு அரசியல்வாதி தான்.” என்று பதில் தெரிவித்தார்.

 

ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் குளறுபடிகள் குறித்து பேசிய விஷால், “அவங்கவங்க பிரச்சனை, அவங்கவங்க கருத்து, அவங்க சர்ச்சை, அவரவர் திணிப்பு. அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.” என்று விஷால் பதில் கொடுத்தார்.இதற்கிடையே, 2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் விஷால் சஸ்பென்ஸ் கொடுத்து சென்றார்.