கவரைப்பேட்டை விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், சிதறிக்கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது. டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் 10 கி.மீ. வேகத்தில் கடந்துச் சென்றது.
கர்நாடகா மாநிலம் மைசூர் – பிகார் மாநிலம் தர்பங்கா செல்லும் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவர்பேட்டையில் விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. சில ரயில்பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்த போதிலும், இந்த பயங்கர விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ரயில் விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு அமைச்சர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் சென்ற நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 8 ரயில்களின் வழித்தடத்தை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, என்ஐஏ அதிகாரிகள் ரயில்வே துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விபத்து நடந்த பகுதியில் ஒவ்வொரு இடமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்து உள்ளனர். மேலும், ரயில்வே அதிகாரிகளிடம் இந்த விபத்து தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்துள்ளனர்.
இந்நிலையில், சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ரயில் பெட்டிகள் இன்ஜின் இடிபாடுகள் அனைத்தும் ராட்சத கிரேன்கள் பொக்லைன் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டன. என்ஜின் சேதம் அடைந்ததால், அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே கும்மிடிப்பூண்டி – சென்னை இடையே சீரமைக்க பட்டப்பாதையில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றன. டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 9 மணியளவில் மெயின் லைனில் 10 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது. 9:40க்கு சாந்த்ராகாச்சி விரைவு ரயில் சுமார் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக விபத்து பகுதியை கடந்து சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




