--- --:--:-- --

ரயில் விபத்துக்கான காரணம் என்ன..?

1

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து நேரிட்டதில் 19 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் மைசூரூவில் இருந்து சென்னை வழியாக பிகார் மாநிலம் தர்பாங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது.

 

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில் கடந்த போது, லூப் டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பலமாக மோதியது. இதில் 11 பெட்டிகள் சேதமடைந்தன. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. உடனே துரிதமாக செயல்பட்ட கவரைப்பேட்டை மக்கள், விரைந்து சென்று ரயில் பயணிகளை காப்பாற்றினர்.

 

இந்த ரயில் விபத்தில் பிரதான தண்டவாளத்தில் செல்வதற்கான பச்சை சிக்னல் பாக்மதி விரைவு ரயிலுக்கு காட்டப்பட்டது. எனினும் அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து ஏன் விலகியது என்பது இதுவரை தெளிவாகவில்லை.

 

அதிவேகத்தில் சென்ற பயணிகள் ரயில், மோதியதில் ஏசி பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரம் ரயில் பெட்டிகளில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதே புரிய சிறிது நேரம் தேவைப்பட்டது.

 

விபத்து நடந்த இடத்தில் அதிகாலை 2 மணிக்கு தடம்புரண்ட பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இரண்டரை மணி நேரம் போராடி ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

 

இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதியில் நடந்தது என்ன என்பது பற்றி உரிய முதற்கட்ட விசாரணையை ரயில்வே காவலர்கள் தொடங்கியுள்ளனர். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே நடந்த இந்த விபத்தில், ரயில் பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் லூப் லைனில் சிக்கியது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

 

விபத்து நேரிட்ட சிக்னல் பகுதி முற்றிலுமாக பொதுமக்கள் செல்லாதபடி மூடப்பட்டு, நள்ளிரவில் ரயில்வே அதிகாரிகள் நடந்தது என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon