--- --:--:-- --

திருப்பூரில் சமூக தொழில் முனைவோர் முயற்சியின் செயல் திறன் கருத்தரங்கு..!

1

மாணவிகள் தங்களுடைய படைப்பாற்றல், புதுமையான எண்ணங்களுடன்  சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். எத்தியோப்பியா ஹவாசா பல்கலைக்கழக கூட்டுறவு துறை பேராசிரியர் டாக்டர் கருணாகரன் பேச்சு..!

திருப்பூர், வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை தாங்கினார்.

 

சமூகத் தொழில் முனைவோர் முயற்சியின் செயல் திறன் என்ற தலைப்பில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஹவாசா பல்கலைக்கழக கூட்டுறவு துறை பேராசிரியர் டாக்டர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர்  பேசியதாவது :- இன்றைய சூழலில் தொழில்கள் அனைத்தும் லாபத்தையும், பங்குதாரர்களையும் மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அணுகு முறையின் காரணமாக இடைத்தரகர்கள் மட்டுமே பயன் பெறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். தொழில் முனைவோர்கள் தங்களுக்கான சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொழிலும் சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

 

உதாரணமாக மனிதன் உயிர் கொல்லியான புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஒரு நிறுவனம் சமூக அக்கறையுடன் செயல்படுகிறது என்றே கூறலாம்.  ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபை வகுத்த வளங்குன்றா இலக்குகளை நோக்கி செயல்பட வேண்டும். அதாவது, வறுமை இன்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, அனைவருக்கும் தரமான கல்வி, மலிவான மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற இலக்குகளை அடைய தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். சமூகத்தொழில் முனைவோர் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

 

குறிப்பாக இதில் பெண்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யும் அரவிந்த் கண் மருத்துவமனை, மலைவாழ் கிராமங்களுக்கு இலவசமாக சூரிய விளக்குகளை வழங்கிக் கொண்டிருக்கும் டி- லைட், இலவச கொசுவலைகளை கிராமங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் டம்பம் போன்ற தன்னார்வ நிறுவனங்களை போல் மாணவிகளும் தங்களுடைய படைப்பாற்றல்களையும், புதுமை எண்ணங்களையும் கொண்டு ஒவ்வொருவரும் சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறை வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, வணிகம் மற்றும் தொழில் பகுப்பாய்வுத்துறை, வணிக மேலாண்மை துறை மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கருத்தரங்கில், கல்லூரி பேராசிரியர்கள் காயத்ரி, கற்பகவல்லி, பூரணிமா சந்திரகலா, கவிதா மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வணிகவியல் துறைத் தலைவர் காயத்ரி நன்றி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon