தென்காசியில் வி.கே.சசிகலா இன்று முதல் 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம்..!
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வி.கே.சசிகலா தொண்டர்களை சந்திக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைக்க தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். இதற்காக பல முக்கிய நபர்களை சந்தித்தார்.
அதனைதொடர்ந்து, 2021 சட்டப்பேரவையில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், ஆனால் அவர் எதிர்பார்த்தபடி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.இதனால், முழுவீச்சில் இறங்கிய சசிகலா, 2022 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தனது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
அதே போல, ஜூலை மாதம் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணம் வெற்றுப் பயணமாகவே முடிந்தது. இருப்பினும், அதிமுகவில் இருக்கக்கூடிய அனைத்து தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதே தனது தலையாய கடமை என கூறி வந்தார்.
இந்நிலையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 7 இடங்களில் டெபாசிட் இழந்து, 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.தோல்வியால் அதிமுக தொண்டர்கள் துவண்டு போன நிலையில், தனது ரீ என்ட்ரீ தொடங்கிவிட்டதாக வி.கே.சசிகலா தடாலடியாக அறிவித்தார். காலம் கணிந்துள்ளதால், 2026 இல் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயமாக அமைப்போம் என சூளுரைத்தார்.
இந்த நிலையில்தான், ’அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில், இரண்டாவது முறையாக வி.கே.சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி, பேரூராட்சி, நகராட்சி, கிராமப்புறம், ஊராட்சிப் பகுதிகள் அனைத்து இடங்களுக்கும் சென்று தொண்டர்களை சந்திக்கிறார். இதற்காக, மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த வி.கே.சசிகலாவை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சசிகலா உள்பட அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென கடந்த வாரம், மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




