வாக்கு எண்ணிக்கையின்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
பாஜகவின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பாஜகவுக்கு எதிராக, ஜனநாயக சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அமைந்துள்ளதாகவும், இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக தேர்தல் களத்தில் கூட்டணி அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணி தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருப்பதாகவும், இந்தியா கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளநிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் ‘இந்தியா’ கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் எனவும், இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




