இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி..!
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் மாலை 4.10 மணிக்கு சென்னை புறப்படுகிறார்.
6.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து 6.10 மணிக்கு சாலை மார்க்கமாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகர் பனகல் பார்க் பகுதிக்கு கிளம்புகிறார். 6.30 மணிக்கு பனகல் பார்க் வந்தடையும் பிரதமர், அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் ஒரு மணிநேரத்துக்கு வாகனப் பேரணியாகச் சென்று பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பின்னர், இரவு 8 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். இரவில் அங்கு ஓய்வெடுக்கும் பிரதமர், நாளை காலை 9.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்படுகிறார்.
10.15 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் வேலூர் கோட்டை மைதானத்திற்குச் செல்கிறார்.தங்கள் கூட்டணிக் கட்சியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து 1.10 மணிக்கு கோவைக்குச் சென்று, 1.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பகல் 2.45 மணிக்கு கூட்டம் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து நாக்பூர் செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, வேலூரில் 3 ஆயிரத்து 900 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




