இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மேலும் ஒரு கட்சி..!
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்நிலையில், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யாதவ், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜகவுடன் கைகோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
இதனிடையே, இந்தியா கூட்டணியில் நீடித்தாலும், தங்களது மாநிலத்தில் தனித்தே போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.இந்த சூழலில், இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தளம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பிரதமர் சரண் சிங்க்கின் மகன் அஜித் சிங், ராஷ்டிரிய லோக் தளம் என்ற கட்சியை உருவாக்கினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த கட்சியை அஜித் சிங் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெயந்த் சிங் வழிநடத்தி வருகிறார்.
இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்து வந்த ராஷ்டிரிய லோக் தளம், நிதிஷ்குமாரை தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்த நிலையில், என்டிஏ கூட்டணியில் தங்கள் கட்சி இணைந்ததை ஜெயந்த் சிங் உறுதி செய்தார். பா.ஜ.க. கூட்டணியில் உத்தரப்பிதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




