--- --:--:-- --

30 பேருக்கு மட்டுமே அனுமதி..அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி தரிசனம்..!

2

அயோத்தியில் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை நேற்று நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் முக்கியஸ்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் அடுத்த நாளான இன்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக கருதி ஏராளமான பொதுமக்கள் அயோத்தியில் நேற்றிரவு முதலே குவியத் தொடங்கினர்.

 

அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில் காலை 7 மணி முதல் 11.30மணி வரை முதல் தரிசனம் செய்ய கோயில் திறக்கப்பட்டது. அப்போது முன்பதிவு செய்த 30 பேருக்கு மட்டுமே முதல் தீப ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அழகாக அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலை திரை போட்டு மூடப்பட்டிருந்தது.

 

கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சிலையை பொதுமக்கள் பார்க்க அனுமதித்தனர். அப்போது பக்தி பெருக்குடன் அந்த 30 பேரும் கண்டு ரசித்தனர். கட்டுக்கு அடங்காத மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

 

காலை 6.30 மணிக்கு ஷ்ருங்கார் ஆரத்தி, பகல் 12 மணிக்கு போக் ஆரத்தி மற்றும் இரவு 7.30 மணிக்கு சந்த்ய ஆரத்தி என நாள்முழுவதும் மூன்று வகையான ராமர் ஆரத்திகள் நடத்தப்படும். பக்தர்கள் வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து தேர்வு செய்து புக்கிங் செய்யலாம் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

 

இது தவிர கோவில் தரிசன நேரம் காலை 7:00 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 02:00 மணி முதல் இரவு 07:00 மணி வரையும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon