--- --:--:-- --

அயோத்தி ராமர் கோயிலின் 500 ஆண்டு கால வரலாறு!

1

ராமர் கோயிலின் வரலாறு என்பது பல்வேறு விதமான போராட்டங்கள், சர்ச்சைகள் நீதிமன்ற தீர்ப்புகளுக்கான ஆண்டுகால காத்திருப்புகள், இந்து மற்றும் இஸ்லாமியர் என இரு தரப்பினருக்குமான ஒரு யுத்த போராட்ட களம் சார்ந்த பயணம் தான் இந்த 500 ஆண்டுகால வரலாறு  என்பதே உண்மை. அயோத்தி கோயிலின் வரலாறு குறித்த தொகுப்பு பின்வருமாறு….

ராமருக்கு உரிய இடமா?

 

இந்து மக்களின் முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் அம்சம்தான் ராமர். ராமர் அவதரித்த இடமாக மக்களால் நம்பப்படும் இடம் தான் தற்போதைய உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரை. இந்த பகுதியானது அயோத்தி மாவட்டத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இதே பகுதியில் குழந்தை ராமருக்கு சிலை வைத்து மக்கள் வழிபட்டு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. மேலும் ராமர் பிறந்த இடமாக அயோத்தி கருதப்படுவதால் இதற்கு  “ராம ஜென்ம பூமி”  என்ற பெயரும் உண்டு.

எழுப்பப்பட்ட பாபர் மசூதி:

 

கி.பி 1500 களில் மொகலாய மன்னர் பாபர், லோடி வம்சத்தை சேர்ந்த மன்னர்களைத் தோற்கடித்து தனது மொகலாய ஆட்சியை தோற்றுவித்தார். பின்னர் இந்து கோயில்களில் படையெடுப்பை  நிகழ்த்தினார். அந்த காலகட்டத்தில் தான் குறிப்பாக 1528ஆம் ஆண்டில் மன்னர் பாபரின் படைத்தளபதியான மிர் பாஹி, என்பவரால்  அயோத்தியில் அமைந்திருந்த குழந்தை ராமர் கோயிலை இடித்துவிட்டு ‘பாபர் மசூதி’ எழுப்பட்டதாக கூறப்படுகிறது.  அதிலிருந்து சுமார் 320 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் எந்தவித பெரியளவு சர்ச்சைகளுமின்றி அதே இடத்தில் தொழுகை நடத்தி வந்தனர். ஆனால் 1853ஆம் ஆண்டு கோயிலை மீட்க இந்து மற்றும் முஸ்லிம் என இரு தரப்பினருக்கும் இடையே  மோதல்கள் ஏற்பட தொடங்கிய நிலையில் அது பெரும்  வன்முறையாக ஆங்காங்கே வெடித்தது.

சர்ச்சைக்குரிய இடமாக மாறிய அயோத்தி:

 

இந்து மற்றும் முஸ்லிம் இருவருக்குமே ஒரு சர்ச்சைக்குரிய இடமாக மாறியது அயோத்தி. இவ்விரு தரப்பினரில் யாருக்கு அந்த இடம் சொந்தம்? யார் உள்ளே செல்லலாம் என்ற கேள்வி எலத் தொடங்கி பின் அது ஒரு சட்டப்பூர்வ பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில் இறுதியில் இருதரப்பினருமே  செல்லலாம் என்ற சமரச முடிவானது எடுக்கப்பட்டது. 1885 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பாபர் மசூதி வளாகத்தில் ராமர் கோயிலை எழுப்ப வேண்டும் என்று மகந்த் ரகுபர் தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி நிராகரித்தார்.  தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர், 1894 ஆம் ஆண்டு அதே சர்ச்சைக்குரிய இடத்திற்கு வெளியே வழிபாட்டிற்காக ராமர் மற்றும் சீதையின் சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பிறகு அந்த இடத்திற்கு யாருமே  செல்ல இயலாதவாரு பூட்டப்பட்டது.

 

இந்து அமைப்புகளின் தொடர் போராட்டம்:

 

முதலில் 1937ஆம் ஆண்டு கோரக்ப்பூர் மடத்தின் தலைவராக இருந்த ‘மஹந்த் திக்விஜய் நாத்’ என்பவர் அயோத்தி ராமர் கோயிலை மீட்பதற்கான முயற்சியில் களமிறங்கினார். ஆனால் அவரது முயற்சியானது தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் அந்த சமையத்தில் இருந்த பிரிட்டிஷ் அரசு இவரது போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை. பின்னர் அயோத்தி ராமர் கோவிலில் தங்களுக்கு இருக்கும் உரிமையினை நிலைநாட்ட தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 1946 ஆம் ஆண்டில் இந்து மகா சபையின் அங்கமான ‘அகில பாரதிய ராமாயண மகாசபா’ என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. ஆனால் அப்போராட்டத்தின் மூலம் பெரியளவிலான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. எனவே அடுத்தகட்டமாக சட்ட போராட்டத்தைத் தொடர முடிவு எடுக்கப்பட்டது.

 

1950ஆம் ஆண்டு ராமர் சிலையை வழிபட அனுமதி கோரி அயோத்தியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ‘கோபால் சிங் விஷாரத்’ என்பவரால் பைசாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து ‘பரமஹம்ச ராமச்சந்திர தாஸ்’ என்பவர் ராமர் சிலையின் வழிபாட்டிற்காக அனுமதி கோரி மனுதாக்கல் செய்தார். தொடர் மனுத்தாக்கல்களின் காரணமாக பூஜை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 1959ஆம் ஆண்டு “நிர்மோஹி அகாரா” என்ற அமைப்பு அயோத்தி ராமர் கோயில் தங்களுக்கே உரியது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வாறு ஒருபுறம் இந்து அமைப்புகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மறுபுறம் 1961ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் மனுதாக்கல் செய்தது, தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பாபர் மசூதி வளாகத்தில் உள்ள ராமர் சீதையின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

 

தொல்லியல் ஆய்வு:

 

1978ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல்த் துறை சார்பில் முதலாவதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் அருகே அகழாய்வு நடைபெற்றது. ஆய்வின் முடிவுகள் பெரியளவில் வெளியிடப்படவில்லை என்றாலும், அந்த இடத்தில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான கோயிலின் கட்டுமானங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் இரண்டாவது முறையாக 2003ஆம் ஆண்டு அயோத்தியில் அதே இடத்தில் தொல்லியல் ஆய்வானது நடத்தப்பட்டது. இவ்வாறு நடந்த தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வழிபாடு செய்ய மறுப்பு:

 

1986ஆம் ஆண்டு வழக்கறிஞர் ‘உமேஷ் சந்திர பாண்டே’ பைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பது குறித்து மனுத்தாக்கல் செய்தார். அதே ஆண்டில் ராமரை வழிபடுவதற்கான  ஒப்புதலை வழங்கியது பைசாபாத் நீதிமன்றம். உடனே இஸ்லாமியர்கள் அந்த ஒப்புதலை எதிர்த்து அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால் 1989ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த ராமரை வழிபடுவதற்கான ஒப்புதல் நிராகரிப்பட்டது. மேலும் இந்த முடிவானது ராமர் கோயிலை கட்டுவதற்கு தடையாக அமைந்தது.

 

பாஜகவின் ‘ராமர் ரத யாத்திரை’:

 

1989ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிக்கையில் பாஜக கட்சி,  அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்போம் என்ற வாக்குறுதியை அறிவித்தது. மேலும் அதே ஆண்டில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது ஆனாலும் கோயில் கட்டப்படவில்லை. 1990 ஆம் ஆண்டு பாஜக கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி ராமர் கோயிலை கட்டுவதற்காக ‘ராமர் ரத யாத்திரை’ நடத்தபோவதாக அறிவித்தார். சோம்நாத் முதல் அயோத்தி வரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்த யாத்திரையில், அத்வானி தினந்தோறும் 300 கி.மீ பயணித்து தலா 6 பேரணிகளில் பேசினார்.

 

இதன்மூலம் பாஜகவிற்கான ஆதரவு பெருகியது. இந்நிலையில் அக்டோபர் மாதம் அத்வானி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். ஆனாலும் இந்த ரத யாத்திரைக்கு இந்தியா முழுவதும் பாஜக கட்சியின் சக்தியானது வலுவானதாக வெளிக்காட்டப்பட்டது என்றே சொல்லலாம். அதன் பின்னர் 1991ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக.

 

பாபர் மசூதி இடிப்பு:

 

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, கரசேவர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடெங்கும் இந்த சர்ச்சையானது ஒரு மதக்கலவரமாக வெடித்தது. அந்த கலவரத்தின்போது  எல்.கே அத்வானி அங்கிருந்ததாகவும் கூறப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி லிப்ரான் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 1993ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய பகுதியான 2.77 ஏக்கர் நிலமும், அதன்  அருகில் உத்திரப்பிரதேச அரசின் கைப்பிடியில் இருந்த 67.7 ஏக்கர் நிலமும் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது.

3 அமைப்புகளுக்கும் பங்கு:

 

தொடர்ந்து நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு அலகபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் வக்பு வாரியம், நிறமோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு பிரித்தளிக்கப்படும் என்ற தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மூன்று அமைப்புமே மேல்முறையீடு செய்தன.

இவ்வாறு எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க முதலில் மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வை உச்ச நீதி மன்றம் அமைத்தது. அடுத்த ஆண்டில் விசாரணை தொடங்கிய நிலையில் அதே வழக்கானது ஐந்து நீதிபதி கொண்ட அமர்வாக மாற்றப்பட்டது. தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திர சூட் போன்ற இவ்வைந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

 

இறுதித் தீர்ப்பு:

 

2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அமர்வில் கூடிய ஐந்து நீதிபதிகளின் ஒரே முடிவாக இத்தீர்ப்பானது வழங்கப்பட்டது. ராமர் கோயிலினை கட்டும் பொறுப்பை ஒரே அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும், என்றும் அந்த அறக்கட்டளையை மத்திய அரசே அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர். அதேபோல இஸ்லாமியர்களுக்கு, மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை, ‘சன்னி வக்பு வாரியத்திற்கு’ வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

கோயில் கட்டுமானப் பணிகள் துவக்கம்:

 

2020 ஆம் ஆண்டு ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளை, பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. அடுத்தகட்டமாக கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையானது அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இதற்கான செலவு என்பது மூன்றாயிரம் கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 22ம் தேதி இன்று அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon