மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்..!
மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியைப் பிடித்து மீண்டும் சிறையில் காவல்துறையினர் அடைத்திருக்கிறார்கள். தேனி மாவட்டம் மலைநகர பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் கொலை வழக்கு ஒன்றின் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.
அவருடைய நன்னடத்தை காரணமாக கடந்த சில மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி மதியம் தோட்ட வேலையை முடித்துவிட்டு செல்லும் பொழுது ஜெயக்குமாரை மட்டும் காணவில்லை.
அவரை சிறை முழுவதும் தேடிய பொழுது கிடைக்காததால் முதல் கட்ட விசாரணையில் ஜெயக்குமார் தப்பி ஓடியது தெரிய வந்தது. தகவல் தெரிவிக்கப்பட்டு கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை அமைத்து காவல்துறையினர் ஜெயக்குமாரை தேடி வந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் அடிப்படை காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





