--- --:--:-- --

வேலுமணியை விரட்டும் வழக்கு! காப்பாற்ற துடிக்கிறதா அரசு? துணைபோன ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதில் சிக்கல்!

fghdfrhd

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் தராமல் எட்டு மாதங்களாக இழுத்தடித்து வருகிறது. வேலுமணியை காப்பாற்ற தமிழக அரசு முற்படுகிறதா என்ற சந்தேகத்தை இது கிளப்பி இருக்கிறது.

 

திமுக ஆட்சி காலத்தில், 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக, எஸ்.பி வேலுமணி இருந்தார். அப்போது மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு புரிந்தார்; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டுகள், அவர் மீது கூறப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக, 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வேலுமணிக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது, 2021ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த முறைகேடுகளில் வேலுமணிக்கு அப்போதைய அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தாகவும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் கூறப்பட்டது. இதற்கு போதுமான ஆதாரங்கள் கைவசம் உள்ளதாகவும் கூறி, அவர்களையும் வழக்கில் சேர்த்து, உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்தது.

 

அதன்படி, விஜயகார்த்திகேயன், கந்தசாமி, பிரகாஷ், மதுசூதனன் ரெட்டி ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்தன. அவர்கள் உள்ளிட்ட 12 அதிகாரிகளை விசாரிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்பு துறை, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடிதம் எழுதி இருந்தது.

 

ஆனால் தமிழ்நாடு அரசு, தற்போது வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. விதிகளின்படி, புகாருக்குள்ளான அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தருவது அல்லது நிராகரிப்பதை, அரசு மூன்று மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு மாதங்கள் கழித்தும் அனுமதி வழங்கவில்லை என்றால் என்ன செய்வதென்று விதிகளில் தெளிவாக இல்லை.

 

லஞ்ச ஒழிப்புத் துறையானது, 12 அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரியும், தற்போது வரை அனுமதியை அரசு வழங்கவில்லை என்று கூறப்படுவது, பல்வேறு தரப்பில் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. லஞ்சம், ஊழல் செய்பவர்களை சிறைக்கு தள்ளுவோம் என்று வாக்குறுதி கொடுத்து, திமுக பதவிக்கு வண்டஹ்து. ஆனால், தற்போது திமுக அரசு தற்போது முறைகேடு புகாருக்கு ஆளான அதிகாரிகளை காக்கும் நோக்கில் செயல்படலாமா என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


துரத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை!

 

வேலுமணி அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை தனது சகோதரர் நடத்தும் மையத்துக்கு ஒப்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

கோவையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நல்லறம் அறக்கட்டளை சார்பில், அம்மா ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்க, கடந்த 2018ம் ஆண்டில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெருக்கடி தரப்பட்டதாகவும், ஆர்.எஸ்.புரத்தில் புதியதாக கட்டப்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

 

இந்த நிலையில், கோவையில் செயல்படும் அம்மா ஐ.ஏ.எஸ்., அகாடமியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அண்மையில் விசாரித்தனர். அகாடமியின் வரவு – செலவு விபரங்கள் மற்றும் மாநகராட்சிக்கும், நல்லறம் அறக்கட்டளைக்கும் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்த விபரங்களை சேகரித்து சென்றுள்ளனர். இது, வேலுமணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.


 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon