அல்லக்கையின் அழுகுணி ஆட்டம்! திருப்பூரில் சமூக ஆர்வலர் போர்வையில்  ‘சூனாபானா’ நரித்தனம்! நிருபர்களுக்கு சவால்விடுத்த பதிவை நீக்கி கோழைத்தனம்..

மோகன் கார்த்திக் குறித்த  “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்துவிட்டு,  பின்னர் பயந்து போய் பதிவை  நீக்கிவிட்ட கோழைகளுக்கு, பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 

நமது “குற்றம் குற்றமே” வார இதழ் மற்றும் இணையதளம், என்றைக்கும் நீதியின் பக்கம், நேர்மையின் பக்கமே நின்று வருகிறது. விருப்பு வெறுப்பின்றி, குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை நெஞ்சில் துணிவோடு உரக்கச் சொல்வதே,   “குற்றம் குற்றமே”  இதழின் அசைக்கமுடியாத பலம்.  பணத்திற்கோ, மிரட்டலுக்கோ, அதிகார வர்க்கத்தின் அதட்டலுக்கோ ஒருபோதும் அடிபணிந்ததில்லை என்பதில் இருந்தே, கரைபடியாத கரம் என்பதை பத்திரிகை உலகமும்,  “குற்றம் குற்றமே” வாசகர்களும் நன்கு அறிவார்கள்.

 

விதிமீறல்கள், முறைகேடுகள்  எங்கு நடந்தாலும் அதை தோலுரித்துக் காட்டுவதோடு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க போராடுவதில் “குற்றம் குற்றமே” உறுதியாக உள்ளது. இப்பணியில் எண்ணற்ற சவால்கள், மிரட்டல்கள் வந்தபோதும், கொண்ட கொள்கையில் இருந்து இம்மியளவும் விலகாது பயணித்து வருகிறது.

 

அவ்வகையில் தான், திருப்பூரை சேர்ந்த பிரபலமானவர் என்று அறியப்படும் மோகன் கார்த்திக் குறித்த செய்தியை,
‘விளம்பர’ மோகம் (ன்) காா்த்திக்!  தன்னார்வலர் கூட்டம் மூலம் பள்ளிக்கு பப்ளிசிட்டி.. திருப்பூர் மேயர் பெயரை வைத்து அட்ராசிட்டி..!!’ என்ற தலைப்பில்,  ‘குற்றம் குற்றமே’ இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

அதில், “சுய விளம்பர நோக்கில், தனது பள்ளி வளாகத்தில் தனக்கு வேண்டப்பட்ட தன்னார்வலர்களை அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இது, உண்மையான இன்னொரு தரப்பு சமூக ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேயர் பெயரை பயன்படுத்தி வெளியிட்ட பதிவில், மேயரின் ஒப்புதல் இல்லாமலேயே விளம்பர நோக்கில் தனது பள்ளி வளாகத்தை சேர்த்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த கருத்தை, எள்ளளவும் மோகன் கார்த்திக் தரப்பினர் மறுக்க முடியாது. இது அவர்கள் அறிந்ததே.

 

இக்கட்டுரை வெளியானதுமே சமூக வலைதளங்களில் “குற்றம் குற்றமே” இணையதளத்தை விமர்சித்தும், ஆதரித்தும் பதிவுகள் வெளியாகின. ஜனநாயக நாட்டில், செய்தியை விமர்சிக்கும் உரிமை எல்லா குடிமகன்களுக்கும் உள்ளது. அதே நேரத்தில், விமர்சனம் என்ற பெயரில் மோகன் கார்த்திக்கை குஷிப்படுத்தும் நோக்கில் அவரது அல்லக்கைகள் சிலரின் ஆட்டம்,  பலரை முகம் சுழிக்கச் செய்துள்ளது.

 

மோகன் கார்த்தியின் காலடியை சுற்றித் திரிந்து, தானும் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறிக் கொண்டு ஆதாயம் பார்க்கும் ஒருசில அல்லக்கைகளில் முக்கியமானவர், சூனா பானா என்று அறியப்படும் சுந்தரபாண்டியன் முக்கியமானவர்.  

 

சூனா பானா, தனது வாரிசை, மோகன் கந்தசாமியின் மகளது பள்ளியில் கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறாராம்.  அதற்கு நன்றிக்கடனான, அவரையே  சுற்றிச்சுற்றி வந்து ‘ஜால்ரா’போட்டு வருவதாக, இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் நம்மிடம் கூறினர்.

 

இந்த ஆசாமி, ஒரு விளம்பரப் பிரியர். டுபாக்கூர் சமூக ஆர்வலர் என்று திருப்பூரின் உண்மையான சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவா்களே வெளிப்படையாக கூறுவதுண்டு.  தனக்கென்று எந்தவொரு வேலையும்  இல்லாத நிலையில்,  பிடிமானத்திற்கு ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டார். வாழ்க்கையை காலம் தள்ள, மனைவியின் வருவாயை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான், தனது அந்தஸ்துக்காக சமூக ஆர்வலர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, சூனா பானா நாடகமாடத் தொடங்கினார்.  சமூக ஆர்வலர் என்ற பெயரில் திருப்பூர் பிரபலங்களுடன் நெருங்கி நின்று போட்டோ எடுத்துக் கொள்வது; அதை காட்டி மற்றவகளிடம் ‘எனக்கு அவரை தெரியும்; எனக்கு இவர் ரொம்ப தோஸ்து’ என்று கதைவிட்டு, தான் சொன்னால் எல்லாம் நடக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

 

வசமாக சிக்கிக் கொண்ட  சூனா பானா

 

இந்த போலி பிம்பம் மட்டுமில்லை; போலி பத்திரிகையாளராகவும் நடித்து வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.  பிரபல செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் என்று கூறிக் கொண்டு,  பூமலூர் பகுதியில் ஒரு நிகழ்வின் போது கையும் களவுமாக சிக்கினார். பின்னர், அந்த தொலைக்காட்சி நிர்வாகம் எச்சரித்ததும், அரண்டு மிரண்டு போனார்.

அதன் பின்னர் தான், பத்திரிகையாளர்கள் என்றாலே, சூனா பானாவுக்கு ஆகாதாம்.  நம் வண்டவாளத்தை வெளிக் கொண்டுவந்த பத்திரிகையாளர்களை விடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தருணம் பார்த்து பத்திரிகையாளர்களை வசைபாடி தீர்த்தார்.

 

இதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்றை சொல்லலாம். தனது சமூகவலைதள பக்கத்தில், திருப்பூரின் பிரபல நாளிதழின்  வார இதழில் வெளியான ஒரு பகுதியை சுட்டிக்காட்டி, ”கிறுக்குத்தனமான கட்டுரைகளை போட்டு, தரத்தை கெடுத்துக்காதிங்க” என்று பதிவிட்டிருந்தார்.  தனக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்பதால், இதேபோல், பல தருணங்களில் பத்திரிகையாளர்களை பார்த்தாலே சூனா பானா-வுக்கு நடுக்க ஆரம்பித்துவிடுமாம்.  மோகன் கார்த்திக்கின் அல்லக்கை தானே என்பதால், பத்திரிகையாளர்களும் இதை பொருட்படுத்தவில்லை.

 

ஆனால், மோகன் கார்த்திக் குறித்த “குற்றம் குற்றமே” இணையதளச் செய்திக்கு பின்னர், சூனா பானா வெளியிட்ட பதிவுதான், மோகன் கார்த்திக்கிற்கு  கொஞ்சம் நஞ்சமிருந்த பெயரையும் கெடுக்கும் வகையில் அமைந்துவிட்டது.  அந்த பதிவில், ” பத்திரிக்கைகாரர்களுக்கு மணி கட்டுவது யார்?  இனி உன்னோட ஜாதகத்தையே தோலுரித்து தொங்க விடுறோம்.. வேடிக்கை மட்டும் பாரு?” என்ற ரீதியில் பகீரங்க மிரட்டல் விடுத்த சூனா பானாவுக்கு, என்ன பயம் வந்ததோ தெரியவில்லை; பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

 

அதுமட்டுமின்றி, பொறுப்பான  நல்ல பிள்ளை போல, சமூக வலைதளப்பக்கத்தில், சமூக சேவை செய்து வரும் தம்மை, விமர்சனம் செய்து வருவதாக ஒரு பதிவை போட்டு, அனுதாபம் தேடிக் கொள்ள முற்பட்டுள்ளார்.  பதிவை போடும் முன்பே விளைவுகளை பற்றி யோசிக்காமல், கோழைத்தனமாக பதிவை நீக்கிவிட்டதாக, திருப்பூர் பத்திரிகையாளர்கள் சிலர் கிண்டலாக பேசிக் கொள்கிறார்.

 

சூனா பானாவின் கோழைத்தனமான பதிவுக்கு, திருப்பூர் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்பதிவுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   பிச்சை எடுப்பது போன்ற வார்த்தைகளுக்கு , நிச்சயம் தகுந்த விலையை தந்தாக வேண்டுமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

எது எப்படியானாலும்,  அல்லு சில்லுகளின் மிரட்டல்கள், “குற்றம் குற்றமே” வார இதழுக்கு கால் தூசிக்கு சமம்.  உருட்டல், மிரட்டல்களுக்கு எப்போதுமே அஞ்சியது கிடையாது. அதேநேரம், விமர்சனம் என்ற பெயரில், பதறிப்போய்  அவதூறுகளை  அள்ளி வீசியதன் மூலம், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக, தங்கள் பக்கம் அநீதி உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது புலனாகிறது.  அதுபற்றி தீவிரமாக புலனாய்வு செய்து, முழு  விவரங்களும்  “குற்றம் குற்றமே” வார இதழில் அடுத்தடுத்து வெளியாகும்.


ஆக்கிரமிப்பு இடத்தில் கிட்ஸ் கிளப் பள்ளி!?

 

திருப்பூர் ஷெரீப் காலனியில் கிட்ஸ் கிளப் பள்ளி உள்ளது.  இப்பள்ளியின் சில பகுதிகள், நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், நீர்வழிப்பாதையில் இருந்த குடியிருப்பாளர்களை விரட்டிவிட்டு, அங்கு கட்டிடம் கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

 

சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் புரவலராக ஆளுனர், துணைப் புரவலராக  கல்வி அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்புகளில் பலர் நியமிக்கப்படுகின்றனர். சாரண சாரணியர் இயக்கத்தில் மோகன் கார்த்தி மகளுக்கு  பொறுப்பு வழங்கப்பட்ட பின்னணியில் விதிமீறல் உள்ளதா என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பியுள்ளனர்.

 

குழந்தைகளுக்கான இலவச  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009, பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.  கிட்ஸ் கிளப் பள்ளியில் இது பின்பற்றப்படுகிறதா? இக்கேள்விகளுக்கு விடைதேடி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் “குற்றம் குற்றமே” தரப்பில் கோரப்பட்டுள்ளது.  இது குறித்த முழு விவரங்கள், “குற்றம் குற்றமே” வார இதழில் விவரமாக வெளியிடப்படும்.


சூனா பானாவால் பாதித்தவரா நீங்கள்?

 

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வலம் வரும் சுந்தர பாண்டியன் பின்னணியை அலசி ஆராய்ந்த போது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும்,  சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நபரின்  அல்லக்கை என்பதால், சிலர் வெளிப்படையாக சொல்வதற்கு  தயங்குவது தெரியவந்துள்ளது.

 

அத்தகையவர்கள், தாராளமாக “குற்றம் குற்றமே” வார இதழை தொடர்பு கொள்ளலாம். உரிய ஆதாரங்களுடன் தொடர்பு கொண்டால், அதை விசாரித்து ஆதாரங்களுடன் வெளியிட தயாராக உள்ளோம். உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.