நாளை இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்..!
9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 74.3 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
1,324 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 10 ஆயிரத்து 379 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதை போன்று இதர மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் நாளை பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற உள்ளது.






