பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் – சாமிநாதன்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து நலவாரிய உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப உதவி நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த துறை தகுதியை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் மாவட்ட மாநில அளவில் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களும் ஊடகத் துறையில் சிறந்து விளங்குவதற்காக தகுதி வாய்ந்த இளம் பத்திரிக்கையாளர்களை தேர்வு செய்து உயர்கல்வி படிக்கவும் பயிற்சி பெறவும் நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.






