மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக 300 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொண்ட தந்தை..!
நரம்பு பிரச்சினையால் அவதிப்படும் மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த தந்தை 300 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிலேயே சென்று வந்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மைசூர் அருகே நரசிபுரா கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர் ஆனந்த் என்பவரது பத்து வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வந்தார். இரு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மகனை அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.
மாத்திரையும் ஒரு நாள் கூட தவற விடக்கூடாது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்ல முடியாமல் தவித்தார்.
இறுதியாக சைக்கிளில் செல்ல முடிவெடுத்து காவல்துறை கெடுபிடிக்கு பயந்து மக்கள் அதிகம் பயன்படுத்தாத பாதை வழியாக இரண்டு நாட்கள் பயணம் செய்து பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றார்.
300 கி.மீ இல் இருந்து வந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது மகனுக்கு தேவையான மாத்திரைகளை பல ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதை பெற்றுக்கொண்டு அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்துள்ளார். 300 கிலோமீட்டர் பயணித்து மகனுக்கு மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






