--- --:--:-- --

தேர்தல் பணியில் அலட்சியம்… பி.டி.ஓ. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்! கோவை கலெக்டர் தடாலடி!!

EC 01

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாகனச் சோதனை பணியில் சுணக்கம் காட்டிய புகாரில், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க, தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட பறக்கும் படை மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இல்லாமல், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்வது இவர்களின் பணியாகும்.

 

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல் அறிந்தும், சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு செல்லாமல் மிகவும் தாமதமாகச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இதை அறிந்த வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பொது மேற்பார்வையாளர், கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய கலெக்டர் எஸ்.நாகராஜன், சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவின் அதிகாரியான, வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளிங்கிரி, காவலர்கள் பிரசாந்த், குமரவேல் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் மூவரும் தேர்தல் பணியில் இருந்து உடனடியாக விலக்கி வைக்கப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon