--- --:--:-- --

“இந்து ஓட்டுகள் முக்கியம்”- ஈரோட்டில் கி.வீரமணியை புறக்கணித்த திமுகவினர்!

Veramani K

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்ற பிரசார கூட்டத்தை, திமுக வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்டவர்கள் புறக்கணித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்துகளின் அதிருப்தியை சம்பாதிக்கக்கூடாது என்பதற்காக, திமுக வேட்பாளர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில், திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், திக தலைவர் கி.வீரமணி பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.

 

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் திருமகன் ஈவெரா, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பங்கேற்றனர். மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமியோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ, வீரமணியுடன் ஒரே மேடையில் அமரவில்லை. வீரமணியில் கூட்டத்தை வேட்பாளர் முத்துசாமி உள்ளிட்ட திமுகவினர் புறக்கணித்தது, திகவினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

 

இது குறித்து ஈரோடு திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, திமுக மீது இந்து விரோதக்கட்சி என்ற முத்திரை உள்ளது. ஆனால், இந்துக்களுக்கு திமுக எதிரி அல்ல. இந்நிலையில், திராவிடர் கழக மேடையில் ஏறி திமுகவுக்கு ஆதரவு கேட்டால், நிச்சயமாக அது திமுகவின் வெற்றியை பாதிக்கும். ஏனென்றால், திகவினர் கடவுள் மறுப்பு பற்றி பேசுவார்கள் என்பதால், திமுகவினர் பங்கேற்கவில்லை என்றனர்.

 

ஆனால் திகவினர் இதை மறுத்துள்ளனர். ஸ்டாலின் ஈரோடு வருகைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால், வீரமணி வரும்வரை காத்திருக்காமல் திமுக வேட்பாளர் உடனே புறப்பட்டுச் சென்று விட்டார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றனர்.

 

ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.க.தலைவர் வீரமணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்காமல் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon