பல்லடத்தில் மதிமுக போட்டி – திமுக கூட்டணியில் மதிமுக – ஐயுஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!!
திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 6ம் தேதிநடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்குகிறது. அதிமுக கூட்டணியில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அத்துடன் பாஜக – பாமக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பல்லடம், மதுரை தெற்கு, சாத்தூர், அரியலூர், மதுராந்தகம் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் ஸ்டாலின் – வைகோ கையெழுத்திட்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொமதேக கட்சிகளுக்கு தலா 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகளும் தலா 6 இடங்களை பெற்றுள்ளன. வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி, ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




