விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற வாக்குறுதி என்னாச்சு? திமுகவுக்கு முருகன் கேள்வி!
விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார் என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக சார்பில், தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில், திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி அருகே சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நிறைவுறையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும். உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பை தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் திட்டங்களை விஷன் 7 என்ற பெயரில் மு.க,ஸ்டாலின் கூறி வருகிறார். திமுக அறிவித்த எழில்மிகு மாநகர் திட்டம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டமாக உள்ளது. மனித கழிவுகளை அகற்றுவதற்கான கருவிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அறிவிப்பு எல்லாம் ஒரு ஏமாற்று வேலை.
விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தரப்படும் என்ற அறிவிப்பை மு.க. ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார். ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் இருந்த போது, ஊழல் மட்டுமே செய்தது என்று, காட்டமாக அவர் விமர்சனம் செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




