தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: பாமக வாக்குறுதி
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மழலையர் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடன் தொகையை தமிழக அரசு வங்கிகளுக்கு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






