--- --:--:-- --

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை சேதம் – பதற்றம்!

mgr statue

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியினர் வெடித்த பட்டாசின் தீப்பொறி பட்டு, எம்.ஜி.ஆர் சிலை தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்தது.

 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கியும், படாசு வெடித்தும், நலத்திட்ட உதவிகள் செய்தும் திமுகவினர் அமர்க்களம் செய்துள்ளனர். ஆனால், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் திமுகவினர் கொண்டாடிய ஸ்டாலின் பிறந்தநாள் விழா, விபரீதத்தில் போய் முடிந்தது.

 

கெஜல்நாயக்கன்பட்டியில் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, அந்த சிலை துணியால் மூடப்பட்டு இருந்தது. இதை கவனிக்காமல், அப்பகுதியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது வெளிப்பட்ட பட்டாசு தீப்பொறி ஒன்று, எம்ஜிஆர் சிலையில் பட்டது; உடனடியாக தீ மளமளவென்று பரவியது.

 

இதை பார்த்து திமுகவினர் பதறிப் போனார்கள். உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த அதிமுகவினர், திமுகவினரை குற்றம்சாட்டி திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் சிலை எரிந்த சம்பவம், கெஜல்நாயக்கன்பட்டியில் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon