கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குப்பையில் பணத்துடன் கிடந்த பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைத்த நகராட்சி தூய்மைப்பணியாளர்களை பாராட்டியதுடன்,வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட் செய்துள்ள சம்பவம் தூய்மைப்பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் ராசாத்தி,சீதா.இவர்கள் இருவரும் குமரன் நகர்,கே.வி.நகர் பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அப்போது,
குப்பைகளிடையே பணப்பை ஒன்று தென்பட்டுள்ளது.உடனே,அதனை எடுத்து திறந்து பார்த்த பொழுது ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்துள்ளது.
இதனையடுத்து அதனை சுகாதார ஆய்வாளரிடம் கொடுத்துள்ளனர். பின்னர்,பணப்பையில் இருந்த ஏடிஎம் கார்டினை கொண்டு வங்கியில் விசாரிக்கையில் கே.வி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவரின் கார்டு என்பதை கண்டறிந்து பணப்பை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. வறுமையிலும்,தங்களது நேர்மையை வெளிக்காட்டிய தூய்மைப்பணியாளர்கள் ராசாத்தி,சீதா இருவரையும் நகராட்சி ஆணையர் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் இவர்களது நேர்மையை பாராட்டும் வகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ” குப்பையில் கிடந்த பணப்பையை உரிய நபர்களிடம் ஒப்படைத்து,மனிதநேயத்திற்கு என்றும் இலக்கணமாய் திகழ்பவர்கள் தூய்மைப்பணியாளர்கள் என்பதை உணர்த்திய பொள்ளாச்சி நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு தன் மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.
வறுமையிலும் தங்களது நேர்மையினை காண்பித்த தூய்மைப்பணியாளர்கள் ராசாத்தி,சீதா இருவரையும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.