--- --:--:-- --

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி..!

7

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 8 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் சனிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மற்றும் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த எட்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் டெல்லியில் நேற்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நான்காவது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 40 விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

இந்த பேச்சுவார்த்தை 8 மணிநேரம் நீடித்துள்ளது. கூட்டத்திற்கு பெண் செய்தியாளரிடம் பேசிய விவசாய சங்க தலைவர் பல்தேவ் சிங் வேளாண் சட்டத்தில் உள்ள குறைகளை அரசிடம் எடுத்துக் கூறியதாகவும் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில் தங்களது தரப்பில் சட்டத்திருத்தங்கள் தேவையில்லை என்றும், சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியதாக பல்தேவ் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

விவசாயிகளிடம் பேசுவதில் அரசுக்கு எவ்வித ஈகோவும் இல்லை என்றும் விவசாய விளை பொருட்களை வாங்கும் வியாபாரிகளை பதிவு செய்வது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

 

விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னெடுக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இரு தரப்பும் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மீண்டும் நாளை பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும் இரு தரப்பும் முடிவு செய்துள்ளனர்.

 

இதனிடையே பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அகாலி தளத்தை சேர்ந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான பிரகாஷ் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை திருப்பி அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon