வியன்னாவில் உள்ள தேவாலயத்தில் ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்..!
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் தேவாலயத்தை சுற்றி ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். வியன்னாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சட்டனர்காஸ் என்னும் தேவாலயத்திற்கு அருகே நேற்றிரவு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
அடுத்தடுத்து மேலும் ஐந்து இடங்களிலும் தாக்குதல் நடைபெற்றது. இதனால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 பேர் காயமடைந்ததாகவும் அதில் 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வியன்னா மாநகர மேயர் தெரிவித்துள்ளார். வியன்னா நகரின் முக்கிய பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவாலயத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலான இரண்டு மணி நேரத்தில் நடைபெற்றதால் அதற்கும் தாக்குதலுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இது மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.






