“ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர்” என் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்ல பாஜக திட்டம்..! மே.வங்க முதல்வர் மம்தா ஆவேசம்!!

Publish by: சிறப்பு நிருபா் --- Photo : எம்.கே.டி


ந்தியாவில் சூப்பர் சர்வாதிகாரம் நடக்கிறது ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி என அதிபர் ஆட்சி முறையை நோக்கி பாஜக சென்று கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

உ.பி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தையும் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்ததற்கும் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளதுடன் போராட்டங்களும் வெடித்துள்ளன.

 

இந்த சம்பவத்தில் பாலியல் கொடுமைக்கு பலியான இளம் பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க செல்லும் எதிர்க்கட்சி தலைவர்களிடம் அடக்கு முறை, அராஜகப் போக்கை கையாளும் உ.பி.அரசின் செயலும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

 

யாருக்கும் பயப்பட மாட்டேன் ராகுல் ஆவேசம்

கடந்த 1-ந்தேதி டெல்லியில் இருந்து ஹாத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசாரை உ.பி. மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். பின்னர், உலகில் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்ற ஆவேசத்துடன் நேற்று புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்காவிடம் மீண்டும் உ.பி.போலீசார் அடக்கு முறையை கையாண்டாலும், வேறு வழியின்றி 5 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர்.

இதே போன்று பலியான பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திரிணாமுல் எம்பி ஓ.பிரையன் கீழே தள்ளப்பட்டு விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

 

அதிபர் ஆட்சி முறை?

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஹாத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், மத்தியிலும் உ .பி.யிலும் ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார்.

 

கொரோனாவை விட, மிகக் கொடிய தொற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அராஜகத்தை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த அநீதிகளுக்கு எதிராக, அனைவரும் அணி திரள வேண்டும்.

 

ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி என அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் சூப்பர் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை என மம்தா கடுமையாக சாடினார்.


Leave a Reply