--- --:--:-- --

“அமைச்சர்களின் சொந்தக் கருத்து தானே தவிர அரசின் கருத்தல்ல!!” 2-ம் தலைநகர் குறித்த சர்ச்சைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி!!

images

தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மாறி மாறி கருத்து கூறி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்களின் கருத்து அவரவர்களின் சொந்தக் கருத்து தானே தவிர அரசின் கருத்தல்ல என முதல்வர் பதிலளித்துள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மதுரையை 2-ம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் அது குறித்த விவாதங்களும் அதிகரித்துள்ளன. மதுரையைச் சேர்ந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையை 2 ஆம் தலைநகரமாக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார். மற்றொரு மதுரை அமைச்சரான கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் மதுரைக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்.

 

இப்படி மதுரைக்கு சப்போர்ட் அதிகரித்த நிலையில் திருச்சிப் பகுதியில் இருந்து எதிர்க்குரல்கள் எழ ஆரம்பித்தன. எம்ஜிஆர் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக்க முயற்சி செய்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, திருச்சியை 2-ம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதால் சர்ச்சை கிளம்பியது. இப்படி அதிமுக அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களால் 2-ம் தலைநகர் குறித்த விவாதங்கள் சூடாகின.

 

முற்றுப்புள்ளி

இந்த நிலையில், தர்மபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2-ம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல; அவரவர்களின் தனிப்பட்ட சொந்தக் கருத்து எனக் கூறி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆக மொத்தத்தில் 2-ம் தலைநகரம் குறித்து அரசுத் தரப்பில் யோசிக்கவேயில்லை என்பது முதல்வர் எடப்பாடி கூறியதன் மூலம் தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon