மு.க.ஸ்டாலின் தலைமையில் 27-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்..! அரசின் கொரோனா பேரிடர் கால மோசடி குறித்து விவாதிக்க முடிவு!!

மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் தோல்வி மற்றும் இந்த பேரிடர் காலத்திலும் அரசுத் தரப்பில் நடைபெறும் மோசடிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதலே, அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்குவதும், அதனை ஆளும் கட்சித் தரப்பில் புறக்கணிப்பதுமாக லடாய் தொடர்கிறது. ஆனாலும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குவதுடன், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.

 

இதில் கொரோனா இறப்புகளை தமிழக அரசுத் தரப்பில் மறைப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தார். முதலில் இதனை அரசுத் தரப்பிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதையும் மறைக்கவில்லை. கொரோனா காலத்திலும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என எதிர் விமர்சனம் செய்தார். தமிழக அமைச்சர்கள் பலரும் இதனையே கூறி வந்தனர்.

சூப்பர் ஸ்டார் “ரியாக்சன்” எப்பவுமே லேட்டானாலும் லேட்டஸ்ட் தான் போலும்..! “கந்தனுக்கு அரோகா” என டுவீட் போட்ட ரஜினி!!

மேலும் படிக்க..

 

இந்நிலையில், கடந்த மார்ச் முதல் ஜூன் 10-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா உயிரிழப்பில் விடுபட்ட கணக்கு என 444 மரணங்களை தற்போது பட்டியலில் சேர்க்கப்படுவதாக நேற்று முன் தினம் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதனால், தாம் முன்னர் கூறிய குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டது. கொரோனா மரணத்தை மறைத்த காரணத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வரும் 27-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்ட்டுள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் பங்கேற்க உள்ள இக்கூட்டத்தில், தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


Leave a Reply