மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமங்கலம் ஊராட்சி 140 பேருக்கு வீடுகளை கட்டி தராமல் வீடு கட்டி விட்டதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலையாமங்கலம் ஊராட்சியில் 225 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் 140 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்பது புகார். அதேசமயம் 140 பேருக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு விட்டதாக அரசு பதிவேட்டில் பதிவாகியுள்ளது. 4 தவணைகளாக பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாகவும் அலுவலர்கள் கூறுகின்றனர்.
அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வடிவேலு பாணியில் கட்டப்பட்ட வீட்டை காணோம் என்று புகார் அளித்துள்ளனர். வீடுகள் மட்டுமல்ல கழிவறைகளும் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தலா 12 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கட்டப்படும் கழிவறைகள் 170 வீடுகளுக்கு கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மற்ற 50 ஊராட்சிகளிலும் வீட்டை காணோம் என்று இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என்பது தெரியவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.