2 மணி நேரத்தில் உருவாக்கப்படும் மருத்துவமனை..!

கொரோனா பரவி வரும் வேளையில் மருத்துவ படுக்கைகள் குறித்த கேள்வி அடிக்கடி எழுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வெறும் இரண்டு மணிநேரத்தில் மருத்துவமனையை உருவாக்கும் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் ஐ‌ஐ‌டியின் முன்னாள் மாணவர்கள்.

 

இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனையா அது எப்படி சாத்தியம்? மருத்துவருக்கான தனி அறை, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு. 15 படுக்கைகள் கொண்ட நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு என அனைத்தும் அடங்கிய மருத்துவமனையை இனி இரண்டு மணி நேரத்தில் உருவாக்கலாம் என்பதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் முன்னாள் ஐ‌ஐ‌டி மாணவர்கள்.

 

பெட்டி வடிவில் மடிக்கப்பட்டு சிறியதாக இருக்கும் இதனை விரித்தால் அனைத்து வசதிகளுடன் கூடிய மெடிகேப் எனப்படும் மருத்துவமனை உருவாகிவிடும். கழிவறை, குளியலறை, மின்சாரம் மற்றும் காற்றோட்ட வசதி போன்ற அடிப்படை தேவைகளும் இதில் அடங்கியுள்ளன. ஆயிரம் சதுர அடி இருக்கும் ஒரு மருத்துவ யூனிட்டை வெறும் 200 சதுர அடியாக அதாவது ஐந்து மடங்கு சிறியதாக்கி மடிக்க முடியும்.

 

எங்கு வேண்டுமானாலும் எளிதாக கொண்டு சென்று அமைக்க முடியும். மருத்துவ தேவையைப் பொருத்து இதனை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக அதற்கு மேலாகவும் மாற்றிக் கொள்ளலாம். முதற்கட்டமாக தற்போது கேரள அரசு வயநாட்டில் மெடிகேப் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ மனையை அமைத்து உள்ளது. மேலும் மேகாலய அரசும் இதுபோன்று 8 மருத்துவமனைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.


Leave a Reply