சங்கர் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின்!
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை நிரூபிக்க தவறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலையும், தண்டனை குறைப்புமே தீர்ப்பாக வந்துள்ளது என்று சுட்டிக்காட்டி ஸ்டாலின் வழக்கின் தீர்ப்பை சட்டரீதியாக பார்க்கும்பொழுது சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் உரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சாட்சிகளையும், முன் வைத்திருக்க வேண்டிய காவல்துறை தன் கடமையிலிருந்து தவறி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் இளைஞர் சங்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது காட்சியாக பதிவாகியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை காவல்துறை சட்டத்தின் முன் உரிய சாட்சியுடன் நிரூபித்து இளம்பெண் கௌசல்யாவிற்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா என்றும் வினவியுள்ளார்.






