--- --:--:-- --

“இனி எல்லாமே கடவுள் கையில் தான்..!!” கொரோனா குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தி கருத்து

sdfg

கொரோனா தொற்று ஒழிவது எப்போது என்பது இனி கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியாக தெரிவித்துள்ளார்.

 

உலகை உண்டு.. இல்லை.. என புரட்டிப் போட்டு பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தொற்று. சீனாவில் தோன்றி 6 மாதங்களைக் கடந்த கொரோனா தொற்று பரவாத நாடுகளே இல்லை என்னும் அளவுக்கு கோரத் தாண்டவமாடி வருகிறது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பல மில்லியன்களை தாண்டியும், உயிரிழப்பும் 5 லட்சத்தை நெருங்கி வருகிறது.

 

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மட்டுமின்றி ஸ்பெயின், பிரேசில், மெக்சிகோ என பல நாடுகளும் பெரும் திண்டாட்டத்தில் திணறி வருகின்றன. இந்த தொற்றை மேலும் பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மக்களின் வெளிநடமாட்டத்தை கடும் கட்டுப்பாடுகள் மூலம் தடுப்பதே தீர்வு என அனைத்து நாடுகளும் விறு விறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் பலனால் பல நாடுகளும் இப்போது சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கி உள்ளன.

 

ஆனால், இந்தியாவில் இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்ததா? என்பது இப்போது கேள்விக்குறியாகி விட்டது. ஏனெனில் கொரோனா பரவல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகள் அதீத நம்பிக்கை கொண்டு விட்டன. இதனால் பிற நாடுகள் அலறியடித்து ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கைகளையும், மக்களுக்கு நிவாரணம் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்ட காலத்தில், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இந்தியாவிலோ மிகத் தாமதமாகவே உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

அதிலும் வெறுமனே நாடு முழுவதும் ஊரடங்கு என அறிவித்துவிட்டு ஒட்டுமொத்தமாக தேசத்தை முடங்கச் செய்ததில் ஏகக் குளறுபடிகள் அறங்கேறி விட்டன. மார்ச் 24-ல் முதல் ஊரடங்கு அறிவித்து அதன்பின் லாக் டவுன் 2, 3, 4, 5 என ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா தாக்கம் என்னவோ விறுவிறுவென வீரியமாகியே வருகிறது. அதிலும் நாட்டில் பொருளாதாரப் பாதிப்பு மிக மோசமடையவே, மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை ஒரு பக்கம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி விட்டது. இதனால் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் , ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதன் விளைவு நிலைமையை மேலும் மோசமாக்க விட்டது என்றே கூறலாம். அதிலும் இந்த ஜுன் மாதத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் இந்தியாவில் கிடு கிடுவென உயரத் தொடங்கி பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

 

கொரோனா பாதிப்பில் நாட்டில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ள நிலையில், நிலைமை மேலும் மோசமாகியே வருகிறது. இதற்கு ஆரம்பம் முதலே தமிழக அரசும் அஜாக்ரதையாக கையாண்ட விதமும், குளறுபடிகளும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தினமும் வெறும் புள்ளி விபரங்களைக் கூறி, தமிழகத்தில் பெரும் பாதிப்பில்லை என்றெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் பல்வேறு அமைச்சர்களும், அதிகாரிகளும் வாய்ஜாலம் செய்தனர்.

அதிலும் முதல்வர் எடப்பாடியோ, தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்திவிட்டது போல, இன்னும் 2 , 3 தினங்களில் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்யமாகி விடும் என்று ஆரூடமே கூறினார். ஆனால் அவர் கூறி இப்போது 2 மாதங்களைக் கடந்த நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் என்னவோ நாளுக்கு நாள் எகிறி, உச்சத்திற்கு சென்று, சமூக பரவலாகி மாறி விட்டது போன்ற நிலைக்கு தமிழகம் திண்டாட்டத்தில் உள்ளது.

 

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு என்று கூறி மீண்டும் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். மதுரை, சேலம் போன்ற மேலும் பல மாவட்டங்கள் முடக்கப்படலாம் என்ற நிலைமையும் உருவாகி மக்கள் பதற்றத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், கொரோனா நிலவரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விரக்திக்கே கொண்டு சென்றுள்ளது போல், அவர் இன்று கூறிய கருத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்ட பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை தடுக்க வே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களை சிரமப்படுத்த அல்ல.மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தால் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முடியும். எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தற்போது சென்னையில் இருந்து வெளியே செல்வோரால் தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது.

 

எனவே சென்னைவாசிகள் வெளியூர் செல்வதை தவிர்த்து, பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.மேலும், கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என விரக்தியில் பேசுவது போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதும் கொரோனா குறித்த நிலைமை மக்களிடம் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon