லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் கல்லூரி மாணவிக்கு தொடர்பா ?
பாகிஸ்தானில் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்புடன்தொடர்புடையவராக இருக்கலாம் என்று கொல்கத்தா பெண்ணை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்கம் மலையக்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி தான்யா பர்வீன் பாகிஸ்தான் வாட்ஸ்அப் எண்ணை வைத்திருப்பதையும், பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் உடன் அவர் தொடர்பில் உள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்களின் மூலமாக ராணுவ வீரர்களை வலையில் விழச் செய்து அவர்களிடமிருந்து தகவல்களை பெற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கு வங்க காவல்துறையினர் மார்ச் மாதத்தில் தான்யா பர்வீனை கைது செய்தனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று இவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தேசிய புலனாய்வு முகமையினர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.






