தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. அண்ணா நகர், ராமபுரம், டி நகர், போரூர், கோயம்பேடு, பெரம்பூர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வில்லிவாக்கம், மீனம்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளான செட்டியப்பணுர், வேப்பம்பட்டு, வலையாம்பட்டு, அம்பலூர் ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மேலும் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களை விட்டு வைக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. இதனால் சாகுபடி பணிகளை தொடங்கி இருக்கும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது.
தள்ளி பேட்டை, கட்டிகணபள்ளி, காவேரிப்பட்டணம் பொது இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழையால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.






