சென்னையில் பொது முடக்கமா? தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் பொது முடக்கத்தை தீவிரப்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்து இன்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
இதனால் சென்னையில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே உயர்நீதிமன்ற நீதிபதிவினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு சென்னையில் பொது முடக்கத்தை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா என அரசு வழக்கறிஞருடன் கேள்வி எழுப்பினர்.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு எதையும் எடுக்கவில்லை என்றும் தமிழக குடிமக்கள் என்ற முறையிலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டுமே பொது முடக்கம் குறித்த கேள்வி எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து இன்று விளக்கம் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






