--- --:--:-- --

பொதுமுடக்க நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு!

3

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பான் 20 சதவீதமும், அமெரிக்கா 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர் இந்தியாவில் ஜிடிபியில் 1 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஏற்கனவே தமிழக அரசு போதிய நிவாரண உதவிகளை வழங்கி உள்ளதாகவும் இதுபோன்ற வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon