ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்த பெண் சடலம் மீட்கப்பட்டது! புகாரில் இருவர் சிக்கியுள்ளனர்!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கண்மாய் கரை காட்டு பகுதியில் 35 வயது மதிக்கதக்க பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு மார்ச் 16ல் தகவல் கிடைத்தது. விசாரணையில் ஒடைக்கரை குணசேகரன் மனைவி காஞ்சனா என தெரிந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.
காஞ்சனா மகள் அபிநயா அளித்த புகாரில், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722 க்கு, காஞ்சனா மர்ம மரணம் குறித்து அவரது உறவினர்கள் ரகசிய தகவல் அளித்தனர். இதனடிப்படையில், எஸ்பி., வருண்குமார் அறிவுறுத்தல் படி, தீவிர குற்ற தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சனா மர்ம மரணம் தொடர்பாக ஓடைக்கரை ஆறுமுகம் மகன் ஆசைதம்பி, ஞானமுத்து மகன் சாமிநாதன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். விசாரணையில், மர்மமான முறையில் இறந்த காஞ்சனா ஆசைத்தம்பி, சாமிநாதன் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.

ஆசைதம்பி, சாமிநாதன் ஆகியோருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மார்ச் 16ல் ஆனந்தூர் கண்மாய் கரை அருகே வந்த காஞ்சனாவிடம் பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என காஞ்சனா மறுத்தார். காஞ்சனா கழுத்தில் கிடந்த செயினை கேட்டு அவர் தர மறுத்ததால், ஆசைதம்பி தான் வைத்திருந்த துண்டால் காஞ்சனாவின் கழுத்தை இறுக்கி, வாய் மற்றும் மூச்சை நிறுத்த சாமிநாதன் செயினை பறித்தார். இதில் காஞ்சனா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதன் பின்னர் ஆசைதம்பி, சாமிநாதன் இருவரும் செயினை எடுத்து கொண்டு தொண்டியில் உள்ள அடகு கடையில் நகையினை ரூ.1.45 லட்சத்திற்கு அடகு வைத்தனர். இப்பணத்தை இருவரும் பங்கிட்டு கொண்டதாக தெரிவித்தனர். இருவரின் வாக்குமூலம் அடிப்படையில், அடகு வைத்த 5 பவுன் தாலி சங்கிலி மீட்கப்பட்டது.






