ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு சீட்டு கட்டணத்தை இன்று முதல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்!
கொரோனா நோய் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு சீட்டு கட்டண தொகையை திருப்பி அளிக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 19 ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் பயணத்திற்கான முன்பதிவு சீட்டை இன்று முதல் திருப்பிக் கொடுத்து அதற்குரிய கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுண்டர்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்று தெரிவித்திருக்கும் ரயில்வே நிர்வாகம், தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. பயணிகள் முழு பணத்தை திரும்ப பெற பயண தேதியிலிருந்து 6 மாதம் வரை நேரம் இருப்பதை நினைவில் கொள்ளுமாறும் ரயில்வே நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.






