ஜோதிடர் கூறியதை கேட்டு தனது கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவன்!
ஈரோடு மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து மூன்று மாத கர்ப்பத்தை கலைக்க செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடம் கை ஜோதிடம், கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் என பல முறைகளில் தமிழகத்தில் ஜோதிடர்கள்தொழில் செய்து வருகின்றனர்.
அவற்றை நம்புவதும் நம்பாததும் தனிநபரை பொருத்தது. ஆனால் ஈரோட்டில் நடந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மனைவியின் வயிற்றில் வளர்ந்து வந்த 3 மாத கருவை எட்டி உதைத்தே கலைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். மனைவியின் கருவை கலைக்கும் அளவுக்கு அப்படி என்ன சொன்னார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள சின்னமனூர் பெரிய ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் 25 வயதான ரம்யா. இவரது கணவர் 30 வயதான முனுசாமி. கூலி தொழிலாளி முனுசாமிக்கும், ரம்யாவுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஒரு மகன் உள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு ரம்யாவுக்கும் அவரது கணவர் முனுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ரம்யா அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி உறவினர்கள், கணவருடன் சேர்த்து வைத்தனர். பின்னர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த ரம்யா மூன்று மாதம் கருவுற்றார். இந்த நிலையில் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என அறிய ஒரு ஜோதிடரை முனுசாமி சென்று பார்த்துள்ளார். ஜோதிடரோ முனுசாமியின் மனைவி ரம்யா வயிற்றிலிருக்கும் குழந்தை பிறந்தால் முனுசாமி உயிருக்கே ஆபத்தாகி விடும் என கூறியதாக தெரிகிறது.
ஜோதிடர் சொன்னதை அப்படியே நம்பியதால் மன உளைச்சலில் இருந்த முனுசாமி ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி ரம்யாவிடம் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் எனவே அந்த கருவை கலைத்துவிடும் கூறியுள்ளார். ஆனால் ரம்யாவோ கருவை கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 மாத கர்ப்பமாக இருந்த ரம்யாவை அடித்தும் வயிற்றில் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளார் முனுசாமி. வலி தாங்க முடியாமல் ரம்யா சத்தம் போட அருகில் இருந்தவர்கள் சென்று சண்டையை விலக்கி விட்டு அவரை மீட்டு குருவரெட்டியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மருத்துவர்கள் ரம்யாவை பரிசோதனை செய்தபோது கணவர் எட்டி உதைத்ததால் கரு கலைந்து இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கணவர் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி ரம்யா போலீசில் புகார் அளித்தார்.
ரம்யா புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . ஜோதிடர் சொன்னதை நம்பி மனைவியின் கருவை கலைக்க முயன்றாரா அல்லது மனைவியின் மீதான சந்தேகத்தில் இது போன்று செயல்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






