காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரு இராணுவ வீரரை அவதூறாக பேசியதாக வெளியான ஆடியோ! துணை கண்காணிப்பாளர் அறிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் , அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரு இராணுவ வீரரை அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வந்த ஆடியோ செய்தி தொடர்பாக தக்கலை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொண்டு அளித்த அறிக்கை.
அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் 22.05.2020 ம் தேதி காலை கொரோனா தடுப்பு பணியில் இருந்தபோது வாட்ஸ் ஆப் அழைப்பில் ஏதோ ஒரு நபர் தான் ஒரு இராணுவ வீரர் என்றும் தனது குடும்ப பிரச்சினையில் நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறியுள்ளதாக தெரியவருகிறது . அதற்கு அவரிடம் பலமுறை சம்பவம் நடந்தது பேச்சிபாறை காவல்நிலைய சரகம் என்றும் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று சொன்னபிறகும் , சரியான பதிலை கூறாததால் இணைப்பை துண்டித்துள்ளதாக தெரியவருகிறது .
அதன் பின்பு தொடர்ந்து அன்றைய தினம் இரவு 22.40 மணிக்கு உதவி ஆய்வாளரின் அலைபேசியில் தொடர்பு கொண்ட வேறு ஒரு நபர் தனது உறவினர் பிரச்சினைக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது . அதற்கு உதவி ஆய்வாளர் இது சம்பந்தமாக எந்தவித புகாரும் வரவில்லை எனவும் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியும் , அந்த நபர் சொன்தையே திரும்ப திரும்ப கூறி சரியான பதிலளிக்காததால் , வேண்டுமென்றே யாரோ ஒரு நபர் இராணுவ வீரர் போல பேசி தொந்தரவு செய்வதாக நினைத்துகொண்டு கோபத்துடன் பேசி இணைப்பை துண்டித்துள்ளதாக தெரியவருகிறது.

பின்னர் உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்ட நபர் அவர் பேசியதை அழித்துவிட்டு உதவி ஆய்வாளர் மட்டும் பேசிய உரையாடலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரியவருகிறது . மேலும் உதவி ஆய்வாளருக்கும் இராணுவவீரருக்கும் முன்பின் அறிமுகம் இல்லை என்கிற சூழலில் உதவி ஆய்வாளர் அவதூறாக பேசவேண்டும் என்ற உள்நோக்கமோ முன்விரோதமோ இல்லை என்று தெரியவருகிறது .
இருப்பினும் மக்கள் பணியில் சேவையாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவதூறான கண்ணியமற்ற முறையில் பேசியதால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் மேற்படி நபர் தனது வீட்டு காம்பவுண்டிற்குள் ஒரு நபர் அரிவாளுடன் வந்ததாக கூறிய சம்பவம் தொடர்பாக 24.05.2020 ம் தேதி அன்று பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக அருமனை காவல் நிலை குற்ற எண் 356/2020 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியை 25.05.2020 ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.






