பெண்களை பாலியல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த காசியின் நண்பர் தற்போது துபாயில் இருப்பதாகவும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் தொடங்கிய காசி நெட்வேர்க் சென்னை, கோவை, பெங்களூர் என விரிவடைந்து தற்போது துபாய் வரை நீண்டுள்ளது.
துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் கௌதம் என்ற இளைஞர் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. இவருக்கும், காசிக்கும் என்ன தொடர்பு? சிக்ஸ்பேக் உடல், நுனி நாக்கு ஆங்கிலம், ஸ்டைலான பாவனை என சமூக வலைதளங்களில் உலா வந்த காசியை பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பியுள்ளனர்.
முகநூல், இன்ஸ்டாகிராமில் தன் வலையில் வீழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை 26 வயதான காசி விட்டுவைக்கவில்லை. நட்பு, காதல், ஜாலி, திருமணம் என்ற வார்த்தைகளை வாரி இறைத்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியாக நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளனர். சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரில் சிக்கிய காசி மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன.
பெண்களின் அந்தரங்க படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்து மிரட்டியது என 6 வழக்குகளை காசி மீது நாகர்கோவில் போலீசார் பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் வழக்கில் காசியை காவலில் எடுத்து விசாரித்த போலீசார் பல்வேறு புதிய தரவுகளை அவர்களிடமிருந்து கறந்தனர்.
அதனடிப்படையில் காசிக்கு உதவிய டேசன் ஜீனோ என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காசியுடன் சேர்ந்துகொண்டு பெண்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்புவதும் அவர்களை மிரட்டுவதும் முக்கிய வேலை என்கின்றது காவல்துறை. தற்போது போக்சோ வழக்கில் காசியை 6 நாள் காவலில் எடுத்து நாகர்கோவில் போலீசார் அதிரடியாக விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில் புதிய தகவல் கசிந்துள்ளது. நாகர்கோவிலில் தொடங்கிய விசாரணை இப்போது துபாய் வரை நீண்டுள்ளது. துபாயில் உள்ள காசியின் நண்பர் கௌதம் என்பவரை கைது செய்ய போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். வெளிநாட்டில் இருந்துகொண்டு ஆபாச மோசடி மன்னன் காசிக்கு உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காசியை விட்டு விலகும் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்புவது, அவர்களை மிரட்டுவது போன்ற மோசமான காரியங்களுக்கு கௌதம் உதவியுள்ளார் என்கிறது காவல்துறை. கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ய இந்தியாவில் உள்ள எல்லா விமான நிலையங்களுக்கும் நாகர்கோவில் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. ஊரடங்கு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் சப்தமில்லாமல் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
வழக்கு விசாரணை குறித்து தவறான தகவல் பரப்பிய வேண்டாமென கன்னியாகுமரி எஸ்பி எச்சரித்துள்ளார். காசிக்கு உதவிய நண்பர்கள் மூவரில் ஒருவரை போலீசார் குறி வைத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள இருவர் சிக்குவார்களா?