தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்து இருக்கும் நிலையில் விசாரணை அமைப்புகள் ஏன் இன்னும் விசாரணையை முடிக்கவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிலை என்ன? தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி போராட்டக் குழுவின் சார்பில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழக அரசு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை நடந்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐயும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு அமைப்புகளின் விசாரணையும் இதுவரை முடிவடையவில்லை.
ஒரு நபர் ஆணையம் இதுவரை நடத்த உள்ள இருபதாம் கட்ட விசாரணையில் மொத்தமுள்ள 704 சாட்சிகளில் 492 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.
போராட்டக்குழுவினர் சமூக ஆர்வலர்கள் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வாக்குமூலங்களை விசாரணை ஆணையம் பதிவு செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையில் 428 அப்பாவிகள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தது தெரியவந்துள்ளது.
இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க விசாரணை ஆணையம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. சிபிஐ விசாரணையை பொறுத்தவரைக்கும் 120க்கும் அதிகமான சாட்சிகளை விசாரித்து உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் இனிமேல் தான் சம்பந்தப்பட்ட காவல்துறை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறியுள்ளனர். ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.