சென்னையில் 7,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளர் சிபிஐ அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்சம் கேட்டு அவர் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் தனது வீட்டு பத்திரத்தை பிணையாக கொடுத்து எம்ஜிஆர் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் எட்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
கடனை செலுத்தி முடித்த பின்னரும் அவர் பத்திரத்தை திரும்ப வாங்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அந்தப் பாத்திரத்தின் மீது சங்கர சுப்பிரமணியன் மீண்டும் கடன் கேட்டுள்ளார். முதலில் கடன் தருவதாக கூறிய வங்கி மேலாளர் ரவீந்திரன் சாமுவேல் பின்னர் 62 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு லோன் வழங்க முடியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து பிணையாக கொடுத்த பத்திரிக்கையை கேட்டதற்கு ரவீந்திரன் சாமுவேல் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கிடையே ரவீந்திரன் சாமுவேல் கெல்லீசில் உள்ள இந்தியன் வங்கி மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார் . அதற்கு முன்பு பத்திரத்தை தரும்படி சங்கர சுப்பிரமணியன் கேட்டதற்கு 7,500 வீட்டிற்கு வந்து தரும்படி ரவீந்திரன் சாமுவேல் கூறியுள்ளார்.
இதுகுறித்து சங்கர சுப்பிரமணியன் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து ரவீந்திரன் பணம் வாங்கும்போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது லோன் கேட்டு வரும் பலரிடமும் லஞ்சம் பெற்று வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.