PUBG விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
ஈரோட்டில் செல்போனில் கேம் விளையாடிய 16 வயது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மாணவனின் உயிர்க் கொலைக்கு காரணம் யார்? இன்று எத்தனை பேரை கில் பண்ணினாய் என்றுதான் பப்ஜி விளையாடியவர்கள் பெருமையாக பேசிக் கொள்வார்கள். தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் பப்ஜி விளையாட்டு மிகப்பிரபலம்.
ஆன்லைன் விளையாட்டு ஈரோட்டில் 16 வயது மாணவனின் உயிர் போக காரணமாகியுள்ளது. என்ன நடந்தது? ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் என்பவரின் 16 வயது மகன் சதீஷ்குமார். குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டிசைனிங் முதலாமாண்டு படித்து வந்தார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில்தான் செல்போனில் தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் கேம் விளையாடி வந்துள்ளார். அதிக நேரம் விளையாடியதால் செல்போன் பழுதடைந்தது. அதனால் கோபித்துக் கொண்ட மகனை சமாதானம் செய்ய தந்தை செல்போனை பழுது பார்த்து கொடுத்துள்ளார். சதீஷ்குமாரின் கேம் உலகத்தில் பகலிரவு இல்லை.
சாப்பிடும்போது கூட கேமில் தான் மூழ்கி இருப்பார் என்கிறார்கள் குடும்பத்தினர். திங்கள் மாலை வீட்டிற்கு அருகில் பழைய மாட்டு சந்தை திடலில் அமர்ந்து சதீஷ்குமார் செல்போனில் கேம் விளையாடி உள்ளார் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாயில் நுரை தள்ளி சதீஷ்குமார் மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே அருகில் இருந்த நண்பர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். இந்த செய்தியை கேட்ட சதீஷ்குமாரின் குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சதீஷ்குமாரின் மரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். என் மகன் கேம் விளையாடுவதில் கெட்டிக்காரன் என்று பெற்றோர்கள் பெருமை படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே சதீஷ்குமார் மரணம் உணர்த்தியுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் கேம் விளையாட்டிற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை பெற்றோர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.






