--- --:--:-- --

மதுரையில் அரங்கேறி வரும் பெண்சிசு கொலைகள்!

11

எல்லாத் துறைகளிலும் சம நிலையை நோக்கி பெண்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நாம் பெருமை பட்டு பேசிக் கொண்டிருக்க நம் கன்னங்களில் அறைவது போல நிகழ்கின்றன பெண் சிசுக்கொலைகள். கடந்த மார்ச் 6ஆம் தேதி மதுரை உசிலம்பட்டியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை தாய், தந்தை மற்றும் தாத்தாவால் கொல்லப்பட்டது.

 

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மதுரை சோழவந்தானில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. ஒருபுறம் ராக்கெட் விஞ்ஞானத்தில் பெண்கள் சாதித்து கொண்டிருக்க மறுபுறம் பால்மணம் மாறாத சிசுக்கள் பெண் என்ற காரணத்தினாலேயே கொல்லப்படுகின்றன. இதற்கு சமூக கட்டமைப்பு முக்கிய காரணம் என்கின்றனர் பெண் ஆர்வலர்கள்.

 

1990களில் உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலை உச்சத்தில் இருந்தது. உசிலம்பட்டியில் பிறந்த பெண் குழந்தைகளில் 80 சதவிகித குழந்தைகள் கள்ளி பாலுக்கு பலியானதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசின் கடும் நடவடிக்கைகளால் தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கியது. இது பெண் சிசுக் கொலையை குறைக்க உதவின.

 

1992 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் வரை 5 ஆயிரத்து 239 குழந்தைகள் தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சுமார் 70 சதவீதத்தினர் பெண் குழந்தைகள். பெண் சிசுக்கொலை, குழந்தைகள் விற்பனை போன்ற சம்பவங்கள் நிகழ்வதை காண முடிந்தாலும் தொட்டில் குழந்தை திட்டத்தில் மீட்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது.

 

ஆறு வயதிற்கும் கீழ் 114 குழந்தைகள் சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2,634 பெற்றோர்கள் தத்தெடுப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். பெண் என்ற காரணத்தினால் ஒரு பாவமும் அறியாத பிஞ்சுகளின் உயிர்களைப் பறிப்பதற்கு பதிலாக குழந்தைகளின் வரவுக்காக தவம் கிடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

 

அதற்கு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தைகள் திட்டம் விரிவுபடுத்தப் படவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon