சென்னையில் காவலர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படையினர் என மொத்தம் 34 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் கொரொனா தடுப்பு பணியில் இருந்த காவல் துறையினருக்கும் நோய் தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 19 காவல்துறையினருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தீயணைப்பு வீரர் உட்பட காவல்துறையை சேர்ந்த மேலும் 8 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் திருவல்லிக்கேணியில் 58 வயது நிரம்பிய தீயணைப்பு நிலைய அதிகாரி,சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து தலைமை காவலர், சூளைமேடு காவல் நிலையம் ரோந்து வாகன ஓட்டுநர், கொத்தவால்சாவடி போக்குவரத்து காவலர், போக்குவரத்து உதவி ஆய்வாளர். மெரினா காவல் நிலைய காவலர் என இதுவரை மொத்தம் 34 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.






