ஊரடங்கை ஒட்டி மதுக்கடைகள் மூடப்பட்டதால் கோவையில் பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை.பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்னர் குற்றவாளிகளை களையெடுக்குமா காவல் துறை ?
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி கோவை எஸ்.பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம், தலைமை காவலர் ஞானவேல் மற்றும. காவலர்கள் மகேந்திரன், யுவராஜா, முத்து ஆகியோருடன் வாகராயம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது,காவல் துறையினரின் வாகனத்தை பார்த்து இருவர் ஓடியதால் சந்தேகத்தின் பெயரில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முருகசாமி,மாரிராஜ் என்பதும்,அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கள்ள சாராயத்தை விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரியவந்தது.மேலும், அதேபோல கிட்டாம்பாளையம் 4 ரோட்டில் வைத்து கருப்பசாமி,பாலன் ஆகியோரும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தனர். மேற்படி நால்வரையும் பிடித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கள்ளச்சாராயத்தை வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய் து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர், 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனை விற்பனைக்கு வைத்திருந்த முருகசாமி,கருப்பசாமி, பாலன்,மாரிராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நான்கு பேரும் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வாகராயம்பாளையத்தில் கள்ளச்சாராய விற்பறையில் ஈடுபட்டதாக மேலும் நால்வர் கைது செய்யப்பட்டு 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான சிறுமுகை,பெத்திக்குட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை இழப்பு,சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காவல் துறையினர் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






