கோவை : சோமனூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக வடமாநிலத்தவர் மூவர் கைது.20 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல் !!!
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும்,மேலும் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா,குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் (38), மங்கலராம் (30) விக்ரம் (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.மேலும், மளிகை கடையில் வைத்து இருந்த சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






