அவசர தேவைக்காக வாகன அனுமதி கோருபவர்கள் இ-பாஸ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தல் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் 29 இரவு 9 மணி வரையும்,சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 6 மணி முதல் 28 ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 

மேலும்,கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும், கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும் எனவும்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் எனவும்,
முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கோவையில் முழு ஊரடங்கு நாளை காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.மாநகர பகுதிகளில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

மேலும்,மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூர் செல்லும் மக்கள் அதற்கான வாகன அனுமதியை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வர அனுமதியில்லை எனவும்,அவசர தேவைக்காக வாகன அனுமதி கோருபவர்கள் இ-பாஸ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply