திருவாரூரில் ஆரம்ப சுகாதாரப் பணியாளருக்கும், பெரம்பலூரில் தீயணைப்புபடை வீரருக்கும் கொரொனா தொற்று உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவாரூரில் சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 29 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதைகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய 40 வயதுடைய ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அவர் பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட 90 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

 

பெரம்பலூரில் தீயணைப்புபடை வீரர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தீயணைப்பு படை வீரர் உட்பட ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் வரும் 27ஆம் தேதி வரை மூடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மருத்துவமனை மருந்தகம் தவிர வேறு எந்த கடையும் திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டதை அடுத்து மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படைவீரர்கள் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தீயணைப்பு நிலையம் மூடப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவருடன் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply